![](https://static.wixstatic.com/media/fe17a4_5feca7ea12a340c5886d18e164e4f246~mv2.png/v1/fill/w_500,h_500,al_c,q_85,enc_auto/fe17a4_5feca7ea12a340c5886d18e164e4f246~mv2.png)
இயேசு தீமை செய்கிறவரா? அல்லது தீமையை அனுமதிக்கிறவரா? இயற்கை பேரிடர்கள் மற்றும் கொள்ளை நோய் போன்ற பொல்லாத சம்பவங்கள் பூமியில் நடைபெறுவதின் காரணம் என்ன?
நம் தேவனுடைய நியமனம் அல்லது சித்தம் இல்லாமல் இந்த பூமியிலே எதுவும் நடப்பதில்லை.
பூமியில் நடைபெறுகிற காரியங்களை இயற்கைப் பேரழிவுகள் அல்லது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் என்று பிரித்துப் பார்க்க முடியாது.
இதனுடைய விளக்கத்தை கர்த்தருடைய ஆவியானவர் எனக்கு கற்றுக் கொடுத்ததை வைத்து நான் கூறுகிறேன். பொறுமையாக இதை முழுவதும் வாசிக்கவும்.
தேவனாகிய கர்த்தர் பூமியை உண்டாக்கி மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்து நல்ல விஷயங்களையும் ஏற்படுத்திவிட்டு மனிதனை உண்டாக்கினார். மனிதனுக்கு முன்பதாக ஜீவ விருட்சத்தின் கனியையும் மற்றும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியையும் வைத்தார். ஏன் அப்படி வைத்தார்? ஏனென்றால் மனிதனை தன்னைப் போல படைத்திருந்தார். தேவன் எப்படி தனக்கு சித்தமானது எல்லாவற்றையும் செய்கிறாரோ அதுபோல மனிதனுக்கும் அவனுக்கு விருப்பமானதை செய்வதற்கு அதிகாரம் கொடுத்திருந்தார். மேலும் மனிதன் தனக்கு கொடுக்கப்பட்ட சுயசித்தத்தை தவறாக பயன்படுத்தும் பொழுது மரணம் வரும் என்பதையும் எச்சரித்திருந்தார்.
இது தேவன் மனிதனை உண்டாக்கின நேரத்தில் ஏற்படுத்தின நியமனம், அது இந்நாள் வரை தொடர்கிறது. மனிதன் தேவனுடைய ஆலோசனைப்படி நன்மையானதை தெரிந்து கொண்ட பொழுது சகலமும் அவனுக்கு நன்மையாகவே இருந்தது ஆனால் எப்பொழுது சத்துருவின் ஆலோசனைக்கு செவி கொடுத்து தேவனுடைய கட்டளையை மீறி தீமையை தெரிந்து கொண்டானோ அப்பொழுது அவனுடைய கிரியையின் பலன் அவனுடைய வாழ்விலும் பூமியிலும் வெளிப்பட்டது.
மனிதனை சுத்திகரிப்பதற்கு தற்காலிகமான சுத்திகரிப்பை மோசேயின் மூலமாய் ஆண்டவர் உண்டாக்கினபோது, மனிதனுடைய வாழ்வில் நன்மை உண்டாவதற்கான கட்டளைகளையும் கொடுத்தார். இதோ உங்களுக்கு முன்பதாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன், நீங்கள் என் கட்டளைகளின்படி செய்தால் என் வார்த்தைகளில் சொல்லப்பட்ட ஆசீர்வாதங்களும், நீங்கள் என் கட்டளைகளை மீறி துரோகம் செய்தால் என் வார்த்தையில் சொல்லப்பட்ட சாபங்களும் உங்கள் மேல் வரும் என்று மோசே மூலமாக ஜனங்களை எச்சரித்தார்.
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசே, யோசுவா மற்றும் காலேப் போன்ற தேவமனிதர்கள் கர்த்தருடைய கட்டளைகளில் உண்மையாக இருந்தபடியினால் தேவனுடைய வார்த்தையில் சொல்லப்பட்டபடியே பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக் கொண்டார்கள்.
ஆனால் அவருடைய ஜனங்கள் அவருடைய கட்டளைகளுக்கு செவிகொடாமல் துரோகம் பண்ணின பொழுது ஆண்டவருடைய வார்த்தையின்படியே சாபமும், பட்டயமும், கொள்ளை நோயும், பஞ்சமும், அழிவும் வந்தது.
மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே யோசுவா கானான் தேசத்தை சுதந்தரித்த பொழுது, அத்தேசத்தில் அருகருகே இருந்த இரண்டு மலைகளை ஒன்றை ஆசீர்வாதமாகவும் மற்றொன்றை சாபமாகவும் கூற வைத்தார் (உபாக 11:29). ஆசீர்வாதமாக கொடுக்கப்பட்ட தேசத்திலே ஏன் சாபமாக ஒரு மலை வைக்கப்பட்டது என்ற கேள்வி இங்கு வரும். இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியது. அதற்கான விளக்கத்தையும் தருகிறேன்.
மனிதனை பாவத்திலிருந்து விடுவித்து நிரந்தரமாக அவனை சுத்திகரிப்பதற்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்தில் தேவன் அனுப்பினார்.
ஆனால் இயேசு பிறந்த பொழுது சிமியோன் என்ற தேவ மனிதன் மூலமாக இயேசுவை குறித்து உரைக்கப்பட்ட கர்த்தருடைய வார்த்தை, "இதோ அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படுத்தத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாய் பேசப்படும் அடையாளமாவதற்கும் இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்".(லூக்கா 2:34).
இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. ரோமர் 9:33.
வேத வசனத்தின்படி இயேசுவே நித்திய கன்மலை என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
தன்னை விசுவாசிக்கிறவர்களை நோக்கி இயேசு சொன்னது, "நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கட்டளைகளை கைக்கொள்ளுங்கள்". இதிலிருந்து என்ன தெரிய வருகிறது? இயேசுவை விசுவாசிக்கிறவன் வாழ்ந்திருப்பான்... அவரை விசுவாசியாமல் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் துரோகம் செய்கிறவன் சொல்லப்பட்ட வசனத்தின்படியே கன்மலையிலிருந்து தவறி விழுவான். கன்மலையிலிருந்து தவறி விழும்போது என்ன நேரிடும்? அதை உங்களுடைய விவாதத்திற்கே விட்டு விடுகிறேன்.
இது தேவனுடைய நியமனம். இஸ்ரவேலர் புறக்கணித்தபொழுது அவர்களுக்கு அழிவும், புறஜாதிகள் இயேசுவை ஏற்றுக் கொண்டபோது இந்த பூமியிலே அவர்களுக்கு வாழ்வும் வந்தது.
இந்த உலகத்தில் இயேசு வாழ்ந்த பொழுது தன்னிடத்தில் கேள்வி கேட்டவர்களுக்கு தெளிவாகப் பேசினார்.
"இது மனிதனால் வந்த அழிவு" என்று நினைப்பவர்களுக்கு இயேசு சொன்னது...👇
லூக்கா 13
1: பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
2: இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப்பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
3: அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.
"இது இயற்கையாக நடந்தது" என்று சொல்பவர்களுக்கு இயேசு சொன்னது
4: சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
5: அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.
இந்த இரண்டு பகுதியிலும் ஒரு காரியம் பொதுவாக சொல்லப்பட்டிருக்கும். இயற்கையோ அல்லது செயற்கையோ நீங்கள் மனம் திரும்பாமல் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப் போவீர்கள் என்று இயேசு சொன்னார். இதிலிருந்து என்ன தெரிகிறது? மனிதன் தேவனுக்கு பயந்து அவருக்கு பிரியமாக வாழும் பொழுது தேவனால் நியமிக்கப்பட்ட ஆசிர்வாதத்தையும் பாதுகாப்பையும் அவன் முழுவதுமாக அனுபவிக்கிறான்.
ஆனால் மனிதன் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்யும்பொழுது அவனுடைய கீழ்ப்படியாமை நிமித்தம் தேவனால் நியமிக்கப்பட்ட சாபங்களையும் அழிவையும் அனுபவிக்கிறான்.
தேவன் மனிதனுக்கு தீமை செய்கிறது என்ன? அல்லது தேவன் தீமை செய்கிறவரா?
இல்லை, அவர் தீமை செய்கிறவர் அல்ல அல்லது தீமை செய்வது அவருடைய நோக்கமும் அல்ல. பின் ஏன் இப்படி நடக்கிறது? ஏனென்றால் இது தேவனுடைய நியமனம். இந்த பூமியும் அதில் உள்ள யாவரும் அவரால் உண்டாக்கப்பட்டவர்கள். அவர் எப்படி மனிதருக்கு தீமை செய்வார்? ஆகவே நாம் அவரை கேள்வி கேட்க முடியாது.
தேவன் எந்த அளவு அன்புள்ளவரோ அதே அளவு நீதியுள்ளவர் என்பதை நாம் மறந்து போகக்கூடாது. தேவன் மனிதருக்கு நன்மை தீமை இன்னதென்று போதித்திருக்கிறார். நம் மீதுள்ள அன்பின் நிமித்தமாகவே இந்த காரியத்தை அவர் செய்தார். ஆனால் இதையும் நாம் மீறும் பொழுது அவர் நீதியுள்ளவராக இருப்பதினாலே அவருடைய நியமத்தின்படியே சகலமும் நடக்கிறது.
பூமியிலே இருக்கிற அதிகாரங்களும் ஆளுகைகளும் இதன் அடிப்படையிலேயே செயல்படுகின்றது. நாம் தேவனுக்குப் பிரியமாக அவருடைய சத்தியத்தில் நடக்கும் பொழுது தேவன் நல்லவர்களை ஆட்சியில் ஏற்படுத்துகிறார். ஆனால் தேவனைப் புறக்கணித்து சத்தியத்திற்கு கீழ்ப்படியாமல் போகும் பொழுது பொல்லாதவர்களை ஆட்சியில் ஏற்படுத்துகிறார்.
தீமையை நன்மையாக மாற்றுகிறவர் நம் தேவன். தன்னுடைய அருமையை வல்லமையை ஜனங்கள் உணரும்படியாகவும், சத்துரு எவ்வளவு பொல்லாதவன் என்று தீமையை உணரும்படியாகவும் கர்த்தர் இதை பயன்படுத்திக் கொள்ளுகிறார். இதன் மூலமாக கர்த்தரிடத்தில் மனம் திரும்பினவர்கள் ஏராளம்.
ஆகவே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் இந்த பூமியிலும், பரலோகத்திலும் தேவன் ஏற்படுத்தின நியமத்தின்படியே சகலமும் நடக்கிறது.
தேவனுடைய சித்தம் வேறு, தேவனுடைய நியமனம் வேறு என்று வாதிடலாம். தேவனுடைய சித்தம் "ஒருவரும் கெட்டுப் போகக்கூடாது" என்பது. ஆகவே தான் மனிதர்கள், தேவனுக்கு விரோதமாக இவ்வளவு கலகம் செய்து துரோகம் பண்ணினாலும், தேவன் கிருபையுள்ளவராக இருந்து எல்லோருக்கும் தருணங்களை தந்து கொண்டே இருக்கிறார். ஆகவே தன்னுடைய தீர்க்கதரிசிகளைக் கொண்டு எச்சரிக்கிறார், கடிந்து கொள்கிறார், தண்டிக்கிறார். இந்த தேவனுடைய இரக்கமும் கிருபையும்தான் பரிசுத்த ஆவியின் மூலமாக இந்த செய்தியை உங்களுக்கு அறிவிக்க வைத்தது.
ஆனால் தேவனுடைய சித்தத்தை மனிதன் தன்னுடைய சுய சத்தத்தின் மூலமாக மீறும் பொழுது தேவனுடைய நியமத்தின்படியே இப்பொழுது தேசங்களில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த அடிப்படை உண்மை கூட அநேகருக்கு தெரியவில்லையே, ஏன்?
இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் (பிசாசு) அவர்கள் சத்தியத்தை அறியாதபடிக்கு அவர்களுடைய மனதின் கண்களை குருடாக்கினான் என்ற வேத வசனத்தின்படி சத்துரு அநேகருடைய மனதின் கண்களை குருடாக்கினான். ஆதாமும் ஏவாளும் இப்படித்தான் சத்துருவினால் குருடாக்கப்பட்டார்கள். ஆம் அன்றிலிருந்து இன்று வரை மனிதர்களை சத்துரு சத்தியத்தின் மூலமாகவே வஞ்சிக்கிறான் அதாவது சத்தியத்தை தவறாக புரிந்து கொள்ள வைத்து அல்லது அதை அறியாமல் இருக்கச் செய்து எல்லாரையும் வஞ்சிக்கிறான்.
எனவே இப்படிப்பட்ட அழிவுகள் அல்லது கொள்ளை நோய்கள் "தேவன் அனுமதித்தாரா? அல்லது தேவனால் வந்ததா?" என்று நாம் கேள்வி கேட்க முடியாது. இது தேவனுடைய நியமனம்.
ஆகவே இந்த மெய்யான கர்த்தருடைய வார்த்தைகளை புரிந்து கொண்டு, கர்த்தருக்கு முன்பதாக உங்களைத் தாழ்த்தி உங்களது அறியாமையினால் அல்லது பிசாசின் வஞ்சகத்தினால் நீங்கள் தேவனுக்கு விரோதமாக பேசின பாவங்களை தேவனிடத்தில் அறிக்கையிட்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள் அப்பொழுது அவர் உங்களிடத்தில் திரும்புவார்.
ஆவியானவர் சொல்கிறதை காது உள்ளவன் கேட்கக்கடவன்.
Comments