![](https://static.wixstatic.com/media/fe17a4_aadff39c08524cd18fcfea871ba79f2f~mv2.png/v1/fill/w_980,h_980,al_c,q_90,usm_0.66_1.00_0.01,enc_auto/fe17a4_aadff39c08524cd18fcfea871ba79f2f~mv2.png)
பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள வித்தியாசம்!!!
தொடர்கிறது... பாகம் - 2
பழைய ஏற்பாட்டிலே கொலை செய்தவன் எந்தவித இரக்கமும் இல்லாமல் கொலை செய்யப்பட்டானே, புதிய ஏற்பாட்டில் அப்படி சொல்லப்படவில்லையே ஆனால் மன்னிக்க வேண்டும், அன்பு கூற வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம்.
பழைய ஏற்பாடு நாட்களில் உள்ள மனிதர்களுக்கும் புதிய ஏற்பாட்டில் இருந்த மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிய வேண்டும்.
பழைய ஏற்பாட்டு நாட்களில் பூமியிலே வாழ்ந்த மனிதர்களுக்குள்ளே எது பாவம் எது அக்கிரமம் என்று அறியாதிருந்தார்கள். மனிதர்களை நல்வழிப்படுத்த எந்தவிதமான ஒழுக்க நெறிகளும் சட்டதிட்டங்களும் இல்லாதிருந்தது. அவனவன் தன் மனதிற்கு எது சரி என்று தோன்றினதோ அதையே செய்து வாழ்ந்துகொண்டிருந்தான்.
ஆனால் முதன் முதலாகத் தேவனாகிய கர்த்தர் மோசேயின் மூலமாக மனிதர்களை நல்வழிப்படுத்துகிற ஒழுக்க நெறிமுறைகளை, அனைத்து காரியங்களைக் குறித்தான சட்டதிட்டங்களை வகுத்துக் கொடுத்தார்.
அதைத்தான் நியாயப்பிரமாணம் என்று வேதம் சொல்கிறது.
நியாயப்பிரமாணம் வந்தபொழுது தான் பாவம் இன்னதென்று நான் அறிந்து கொண்டேன் என்று பவுல் அப்போஸ்தலன் எழுதியிருக்கிறார். நம் ஆண்டவர் ஆதியும் அந்தமுமானவர், சகலவற்றிற்கும் தொடக்கமும் முடிவுமானவர். ஆகவே இப்படித்தான் சகல தேசங்களுக்குள்ளும் ஜனங்களை நல்வழிப்படுத்துகிற சட்ட திட்டங்கள் ஏற்பட்டது.
ஆதாம் மூலம் பாவமும், பாவத்தின் சம்பளமாகிய மரணமும் இந்த உலகத்திற்குள் வந்தது. இதன் மூலம் பூமி சபிக்கப்பட்டது, மனிதன் வேதனையோடு சகலவற்றையும் செய்ய நேரிட்டது. ஆனால் மனிதனை நிரந்தரமாகப் பாவத்திலிருந்து சாபத்திலிருந்து விடுவிக்கத் தேவன் குறித்த காலத்தை நியமித்திருந்தார். அதுவரை தற்காலிகமான சுத்திகரிப்பை மோசேயின் மூலம் கர்த்தர் ஏற்படுத்திக் கொடுத்தார். தேவன் முன்குறித்த வேளையிலே இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்குள் வந்து எல்லாருடைய பாவங்களையும் சுமந்து இரத்தம் சிந்தி உயிரோடு எழுந்திருக்கும் வரைக்கும் இந்தக் காரியம் நீடித்திருந்தது என்பதை நாம் உணர வேண்டும்.
இப்பொழுது கொலை செய்தவர்களைக் குறித்து பார்ப்போம்.
எண்ணாகமம் 35 ஆம் அதிகாரத்தில் கொலை செய்தவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தேவன் மோசேக்கு கட்டளையிட்டார். அதின் விவரமாவது: கொலை செய்தவன் கொலை செய்யப்பட வேண்டும். அவன் எந்த விதத்திலே கொலை செய்தானோ அதே விதத்திலே கொலை செய்யப்பட வேண்டும். ஆனால் அவன் கொலை செய்யப்படும் முன் நியாயம் விசாரிக்கப்பட வேண்டும். (இந்த நடைமுறைதான் இன்று எல்லா தேசங்களுக்குள்ளும் இருக்கிறது.) அவன் நியாயம் விசாரிக்கப்படும் முன் பழிவாங்குகிறவனால் அவன் கொலை செய்யப்பட்டு விடக் கூடாது என்பதற்காக அடைக்கலப் பட்டணங்கள் என்று ஏற்படுத்தப்பட்டது. கொலை செய்தவன் அடைக்கலப் பட்டணங்களில் ஒன்றில் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். அவன் அடைக்கலப் பட்டினத்திற்குள் இருக்கும்பொழுது யாரும் அவனைக் கொலை செய்ய முடியாது, கொலை செய்யக் கூடாது. அந்த அடைக்கலப் பட்டணங்கள் எல்லாமே லேவியர் ஆசாரியர்களுக்கென்று கொடுக்கப்பட்ட பட்டணங்களில் மாத்திரம் ஏற்படுத்தப்பட்டது.
ஒருவன் எந்தவித தீய நோக்கமும் அல்லது பகையும் இல்லாமல் தற்செயலாக அல்லது கைப்பிசகாய் ஒருவனை கொன்றிருந்தால், அவன் நியாயம் விசாரிக்கப்பட்டு அது உண்மை என்று கண்டறியப்பட்டால் கொலை செய்தவன் பழிவாங்கப்படக் கூடாது. ஆனால் அந்த அடைக்கலப் பட்டணத்திற்குள் தான் அவன் வாழ வேண்டும். அந்தப் பட்டணத்தில் உள்ள ஆசாரியன் உயிரோடு இருக்கும் மட்டும் அவன் அங்குத் தான் இருக்க வேண்டும். அந்த ஆசாரியன் மரித்தபின்பு அவன் சுதந்திரமாக வெளியே போகலாம்.
ஆனால் தீய நோக்கத்தோடு பகையோடு ஒருவன் கொலை செய்திருந்தால், அவன் நியாயம் விசாரிக்கப்பட்டு சாட்சிகளின் ஆதாரத்தோடு அது உண்மை என்று கண்டறியப்பட்டால், அவன் கொலை செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதுதான் எல்லாம் தேசங்களிலும் சட்ட திட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
அநியாயமாய் கொலை செய்தவன் கொலை செய்யப்பட வேண்டும் என்று தேவன் ஏன் நியமித்தார் என்றால் இரத்தம் சிந்தப்படும்பொழுது தேசம் தீட்டுப்படும். அதின் நிமித்தம் எல்லா ஜனங்களுக்குள்ளும் ஏராளமான பாதிப்புகள் உண்டாகும். அந்தப் பாதிப்புகளில் மிகப்பெரிய ஒன்று தேவாதி தேவன் மனிதர்கள் நடுவே வாசம் செய்வது தடைபடும். ஆகவே அவன் நிமித்தம் ஏற்படுகிற எல்லாம் பாதிப்புகளும் ஜனங்களை விட்டு நீங்க வேண்டும் என்றால் இரத்தம் சிந்தினவனுடைய இரத்தம் சிந்தப்பட வேண்டும். அப்படி அவன் கொலை செய்யப்படும்பொழுது தீட்டு ஜனங்களை விட்டு, தேசத்தை விட்டு விலகும்.
இன்று தேசங்கள் பலவித சாபங்களுக்குள் அழிவுகளுக்குள் தீமைகளுக்குள் இருப்பதின் காரணம் அநியாயமாய் சிந்தப்பட்டவர்களுடைய இரத்தம் ஏராளம் ஏராளம். தேசத்தின் தலைவர்களோ அல்லது அதிகாரிகளோ அதற்கு உண்மையான நீதி வழங்காமல் அநியாயம் செய்யும்பொழுது அந்தச் சாபம், அந்தச் சாபத்தினால் வருகிற தீமைகள் தேசத்தின் ஜனங்கள்மேல் விழுகிறது.
இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாய் இருக்கிறார். எண்ணாகமம் 35 ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட அடைக்கலப்பட்டணம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது. பாவம் செய்கிற எவனும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அடைக்கலத்திற்கு வந்து தன்னுடைய பாவங்களுக்காக மனம் வருந்தி அவருடைய இரக்கத்திற்காக வேண்டிக் கொள்ளும்பொழுது ஜீவனுள்ள தேவனுடைய சமூகத்திலே (அடைக்கலப்பட்டணம்) அவன் என்றென்றும் பிழைத்திருப்பான்.
ஒருவேளை அவன் துணிகரமாகக் கொலை செய்திருந்தாலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்து தன்னுடைய அக்கிரமத்திற்காக மனம் வருந்தி அவரிடத்தில் மன்னிப்பு கேட்பான் என்றால் அவனுடைய அக்கிரமும் மன்னிக்கப்படும், அவன் அக்கிரமத்தின் மூலம் வந்த தீட்டும் தேசத்தை விட்டு விலகும். ஆனால் தேசத்தின் சட்டதிட்டங்களின்படி அவன் தண்டனையை அனுபவிக்க வேண்டியதாக இருக்கும்.
பழைய ஏற்பாட்டிலும் துணிகரமாகக் கொலை செய்து இரத்தம் சிந்தினவனையும் அவன் உண்மையாக மனம் திரும்பியபொழுது தேவன் மன்னித்திருந்தார். உதாரணம் ஆகாப் என்ற இஸ்ரவேலின் ராஜா. அவன் மனைவியாகிய யேசபேலின் வார்த்தையைக் கேட்டு ஏராளமான தீர்க்கதரிசிகளையும், அப்பாவி ஜனங்களையும் கொன்று அவர்கள் இரத்தத்தை அநியாயமாய் சிந்தி தேசத்தை மிகவும் தீட்டுப்படுத்தினான். அவன் நாட்களிலே மழையே பெய்யாமல் கொடுமையான பஞ்சம் இஸ்ரவேல் தேசத்தின் மீது வந்தது. அவன் செய்த அக்கிரமங்கள் நிமித்தம் எலியா தீர்க்கதரிசி மூலமாக அவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பை கர்த்தர் சொன்னபோது, ஆகாப் நடுநடுங்கி கர்த்தருக்கு முன்பதாகத் தன்னை தாழ்த்தினான். யேகோவா தேவன் உடனே அவனுக்கு மனம் இரங்கி அவன் நாட்களில் செய்வேன் என்று சொன்ன நியாயத்தீர்ப்பை செய்யாதபடி இரக்கம் பாராட்டினார். ஆனால் அவன் நாட்களுக்குப் பிறகு சொல்லப்பட்ட நியாயத்தீர்ப்பு நிறைவேறினது. அவனுடைய மனைவி யேசபேலும் அவர்களுடைய பிள்ளைகளும் ரத்தம் சிந்தி மரித்தார்கள்.
பழைய ஏற்பாட்டிலே இரத்தம் சிந்தப்பட்டால் அதைச் சரிப்படுத்துவதற்கு இரத்தம் சிந்தப்பட வேண்டும். அப்படி சிந்தப்படும்பொழுது தேசத்தை விட்டு அந்தத் தீட்டு விலகும். ஆனால் புதிய ஏற்பாட்டிலும் அந்த நியமனம் தான் இருந்தது, இன்றைக்கு வரைக்கும் இருக்கிறது. தேவன் நியமித்ததை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் புதிய ஏற்பாட்டிலே எல்லாருடைய பாவங்கள் அக்கிரமத்தின் நிமித்தம் வருகிற தண்டனையை இயேசு கிறிஸ்து தன்மேல் ஏற்றுக்கொண்டு தம்முடைய பரிசுத்த ரத்தத்தை சிந்தி மரித்தார். இயேசு இவ்வாறு நமக்காக இரத்தம் சிந்தி மரித்து உயிரோடு எழுந்தது, யேகோவா தேவன் நம்மீது வைத்த அன்பினாலும் இரக்கத்தினாலும் நடந்தது.
ஆகவேதான் எப்பேர்பட்ட குற்றவாளியானாலும் தன் தவறுகளுக்காக மனம் வருந்தி இயேசுவிடம் வரும்பொழுது, அவரின் இரக்கம் கேட்கும்பொழுது அவனுக்காகச் சிந்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தின் நிமித்தம் அவன் மன்னிக்கப்படுகிறான். அவன் நிமித்தம் வந்த சகல சாபங்களும் தீட்டும் அவனை விட்டும் தேசத்தை விட்டும் விலகுகிறது.
இதுதான் பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள வித்தியாசம்.
தொடரும்...
Comentários