top of page
Search

பாகம் 1 - பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள வித்தியாசம்!!!

Writer's picture: True WorshipTrue Worship

பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள வித்தியாசம்!!!


பாகம் - 1


அநேகர் பிதாவாகிய தேவனால் கொடுக்கப்பட்ட கட்டளைகளை அதாவது பழைய ஏற்பாட்டில் உள்ள தேவனுடைய வார்த்தைகளை இயேசு வந்து மாற்றி விட்டதாக நினைக்கிறார்கள்.


இதன் நிமித்தம் பிதாவாகிய தேவன் மிகவும் கடுமையானவராகவும் இயேசு தான் அன்பானவர் என்ற தோற்றம், எண்ணம் அநேகருடைய மனதுக்குள் வந்துவிட்டது.

இதன் நிமித்தம் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிற வார்த்தைகளையும் தீர்க்கதரிசனங்களையும் அங்கு நடைபெற்ற சம்பவங்களையும் குறிப்பிடுவதையே அநேகர் தவறாகப் பார்க்கிறார்கள்.


இதற்கு ஆதாரமாக "பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" மத்தேயு 5:27,28 என்ற இயேசு கிறிஸ்துவினுடைய வார்த்தைகளை இவர்கள் குறிப்பிடுவார்கள்.


ஆனால் இந்த வார்த்தைகளையெல்லாம் அவர் சொல்லும் முன்பு இந்த வசனத்தையும் அவர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.


மத்தேயு 5:17

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.


மேலும்,

Matthew 5:18, 19

வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.


ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.


இந்த வசனங்களைச் சொல்லி நியாயப்பிரமாணத்தில் உள்ள தேவனுடைய வார்த்தைகள் எவ்வளவாய் நிலைத்திருக்கும் என்றும் அதைச் சிறிதாயினும் யாரும் மீறக் கூடாது என்றும் போதித்து எச்சரித்தார்.


சரி, இயேசு சொன்ன வார்த்தைகளுக்குள் நாம் ஒவ்வொன்றாகக் கடந்து போவோம்.


மத்தேயு 5

21: கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

22: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.


"கொலை செய்யாதிருப்பாயாக" என்ற கட்டளையை இயேசு இங்கு நீக்கவில்லை அல்லது மாற்றவில்லை.


ஆனால் அதற்குப் பதிலாக அந்தக் கட்டளையின் உண்மையான ஆழமான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறார். அநேகர் பொறாமையோடும், கோபத்தோடும், பகையோடும் மற்றும் எரிச்சலோடும் பேசுகிற வார்த்தைகள் பட்டயம் போன்று பாதிக்கப்படுகிறவனுடைய இருதயத்தை குத்திக் கிழிக்கும். இது பாதிக்கப்படுகிறவனுடைய இருதயத்தில் ஆறாத காயமாகத் தங்கியிருக்கும். இந்தக் காயம் பாதிக்கப்பட்டவனுடைய மனநிலையை வாழ்க்கையை எதிர்காலத்தை மிகவும் பாதிக்கிறதாகக் காணப்படும். இதைத்தான் இயேசு சொன்னார், "ஒருவனுடைய மனதை அவனுடைய வாழ்க்கையை எதிர்காலத்தை நீ உன்னுடைய பொல்லாத வார்த்தைகளினால் கொலை செய்கிறாய். ஆகவே நீ நியாயத் தீர்ப்புக்கு, ஆக்கினைத் தீர்ப்புக்கு மற்றும் எரிநரகத்திற்கு ஏதுவாய் இருப்பாய்" என்று "கொலை செய்யாதிருப்பாயாக" என்ற கட்டளையின் உண்மைத்தன்மையை இயேசு இங்கு வெளிப்படுத்துகிறார்.


இப்படி பாதிக்கப்படுகிறவர்களுக்கு நேரிடுகிற காரியங்கள் மிகவும் வேதனையானது. அநேகர் இப்படிப்பட்ட வார்த்தைகளினால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி சமுதாயத்தில் அவர்கள் எழும்ப முடியாதபடிக்கு கூனிக் குறுகிப் போய் நிற்பார்கள். தங்களைத் தாங்களே குறைவாய் மதிப்பிட்டுக் கொள்வார்கள். சிலர், அவர்கள் செய்து கொண்டிருந்த நற்பணிகளை நிறுத்தி விடுவார்கள். அநேகர் வியாதிப் படுகிறார்கள். சிலருடைய மனது கடினமாகி பழிவாங்க எழும்புவார்கள். இப்படித்தான் சமுதாயத்தில் கொலைகள், பழி வாங்குதல் நடைபெறுகிறது.


பிதாவாகிய தேவன், "கொலை செய்யாதிருப்பாயாக" என்று கட்டளையிட்டார். ஆனால் இயேசு அந்தக் கொலை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று ஆணிவேரை குறிப்பிட்டு காண்பித்தார்.


இதைச் சொல்லிவிட்டு அடுத்து இயேசு சொல்லுகிறார்....


மத்தேயு 5

23: ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில்,

24: அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.


ஏன் இயேசு இதைச் சொல்லுகிறார் என்றால்...


நீ பட்டயக்குத்துக்கள் போல் பேசி உன் சகோதரனைக் காயப்படுத்தி அவனுடைய மனநிலையை வாழ்க்கையை எதிர்காலத்தைக் கொலை செய்துவிட்டாய். இப்பொழுது நீ தேவ சமூகத்துக்கு வருகிறாய். இந்த நிலைமையில் உன்னுடைய ஜெபங்களும் காணிக்கைகளும் என்னால் அங்கீகரிக்கப்படாது ஏனென்றால் உன் சகோதரனுக்கு உன்பேரில் குறை உண்டு. நீ அவனை உன் வார்த்தைகளினால் காயப்படுத்தி விட்டாய், கொலை செய்து விட்டாய். ஆகவே முன்பு அதைப் போய்ச் சரிப்படித்து விட்டு வா, அதன் பிறகு உன்னையும் உன் காணிக்கையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று தன் சகோதரனைக் காரணம் இல்லாமல் கோபித்துக் கொள்பவனை, வீணன் மற்றும் மூடன் என்றும் சொல்லுகிறவர்களை நோக்கி இயேசுச் சொன்னார்.


இன்று அநேகருடைய ஜெபங்கள் கேட்கப்படாமல் இருக்கிறதின் காரணங்களில் இதுவும் ஒன்று. அநேகர் தேவனிடத்திலிருந்து வாக்குத்தங்களைப் பெற்றும் அந்த வாக்குத்தத்தின்படி ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளாததின் காரணங்களில் இதுவும் ஒன்று. தங்கள் வாழ்க்கையின் மூலம் இயேசு கிறிஸ்துவின் சாயலை கிறிஸ்தவர்கள் வெளிப்படுத்த முடியாததின் காரணங்களில் இதுவும் ஒன்று. ஏராளமான உபவாச ஜெபங்களும் ஆராதனைகளும் நடைபெற்றாலும் தேவனால் உண்டாக வேண்டிய அசைவு காணப்படாமல் போகிறதின் காரணங்களில் இதுவும் ஒன்று. தேசத்தில் வர வேண்டிய எழுப்புதல் தடைபடுவதின் காரணங்களில் இதுவும் ஒன்று.


இந்த வார்த்தையையும் சத்துரு குழப்பி கிறிஸ்தவர்களை அல்லது விசுவாசிகளைத் தவறாகப் புரிந்து கொள்ள வைப்பான். அதில் ஒன்று...


கர்த்தர் தாம் நேசிக்கிறவர்கள் தவறு செய்யும்பொழுது அல்லது பாவம் செய்து மீறும்பொழுது கடிந்து கொள்கிறார், சிட்சிக்கிறார் (காயம் உண்டாக அல்லது தழும்புண்டாக). அந்தக் காயம் என்னவென்றால் நமக்குள் விழுந்த அல்லது பிசாசினால் விதைக்கப்பட்ட அந்தக் கசப்பான விதையை (அநேகருக்குள் அந்த விதை விழுந்து மரமாகி இருக்கும்) வேரோடு பிடுங்கினதினால் வந்த காயம். ஆம் நமக்குள் காணப்படுகிற தீமையான சுபாவங்களை அல்லது கிரியைகளை நம் வாழ்க்கையை விட்டு வேரோடு பிடுங்கும்படியாகத் தேவன் சில கடினமான பாதைகள் வழியாக நம்மை நடத்துகிறார்.


அதைத்தான் இங்கு நான் குறிப்பிடுகிறேன்.


சில நேரங்களில் தேவன் தம்முடைய வார்த்தைகள் மூலமாக நேரடியாகவும் பல நேரங்களில் தம்முடைய உண்மையான தீர்க்கதரிசிகள் வழியாகவும் தன் ஜனங்களைச் சரிப்படுத்த அவர் பேசி எச்சரிக்கிறார், கண்டிக்கிறார். ஆனால் இந்த வார்த்தைகளைச் சத்துரு பட்டயக்குத்துக்கள் போலக் காண்பிப்பான். "தேவனுக்கு உன்மீது அன்பு இல்லை ஆகவே தான் உன்னை மாத்திரம் எல்லாருக்கும் முன்பதாக இப்படி கடிந்து கொள்கிறார்.


அவ்வளவுதான் உன்னைக் கைவிட்டு விடுவார்" என்று தேவனையும் அவருடைய வார்த்தைகளையும் தவறாகச் சத்துரு காண்பிப்பான். இப்படி கர்த்தருடைய வார்த்தையினால் நம்மை எச்சரிக்கிற தேவனுடைய ஊழியனையும் அப்படியே தவறாகக் காண்பித்து நம்மைச் சத்தியத்திற்கு செவிகொடாதபடி தேவனை விட்டு வழி விலகச் செய்வான். இவரெல்லாம் தேவனுடைய ஊழியரா? என் உள்ளத்தை இந்த அளவுக்குக் காயப்படுத்துகிறாரே?


தேவனுடைய ஊழியன் என்றால் அன்பாகப் பேச வேண்டும் ஆறுதலாகப் பேச வேண்டும் அதை விட்டுவிட்டு இப்படி காயப்படுத்துகிறாரே என்று உள்ளத்துக்குள் கலகத்தின் விதையை விதைப்பான். ஆகவே அவனுடைய தந்திரத்திற்கு எச்சரிக்கையாக இருங்கள்.


இப்படிப்பட்ட பிசாசினுடைய தந்திரத்திற்கு நாம் தப்பும்படியாகவும், தேவனையும் அவருடைய வார்த்தைகளையும் நாம் உள்ளபடி அறிந்து நம் வாழ்வில் தேவ சித்தத்தை செய்யும்படியாகத் தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியானவரை நமக்குத் துணையாளராகக் கட்டளையிட்டார்.


கர்த்தருடைய ஆவியானவரை நீங்கள் இதுவரை பெறாமல் இருந்தால் இன்றே தேவனிடத்தில் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். கர்த்தருடைய ஆவியானவரை எல்லா காரியத்திலும் சார்ந்து கொள்ளுங்கள். அப்பொழுது சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.


மற்றவர்களுடைய பட்டயக்குத்துக்கள் போன்ற வார்த்தைகளினால் நீங்கள் காயப்பட்டிருந்தால் இன்றே நீங்கள் இருக்கிற வண்ணமாக இயேசுவிடத்தில் வந்து உங்களுக்கு நேரிட்ட யாவற்றையும் அவரிடத்தில் சொல்லுங்கள். அவர் உங்கள் காயங்களைக் குணமாக்கி, இனி அந்த வார்த்தைகள் உங்களைக் காயப்படுத்தாதபடி உங்களைப் பாதுகாத்து உங்களை வாழ வைக்கிற தம்முடைய வார்த்தைகள்மூலம் உங்களை மேன்மைப்படுத்துவார். ஆமென்! அல்லேலூயா!!


ஆகவே பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதல்தான் புதிய ஏற்பாடே தவிர வேறொன்றும் இல்லை.


தொடரும்...

59 views0 comments

Recent Posts

See All

Comentários


True Worship

Solomon R  |   Contact :+91 97900 62314

© 2024 by True Worship Ministries

bottom of page