தொடர்கிறது... ( பாகம் 3 )
ஆண்டவர் தனக்காக ஒரு இளம் சந்ததியை ஆயத்தப்படுத்தும்படியாகச் சொன்னதற்கு வேதத்திலிருந்து எனக்கு ஒரு விளக்கமும் கொடுத்தார்.
மோசே தலைமையில் எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரரில் யோசுவா காலேப் தவிர எல்லாரும் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தார்கள். ஆகவே யோசுவா காலேப் தவிர ஒருவரும் கானான் தேசத்தைச் சுதந்தரிக்காமல் வனாந்தரத்திலே மரித்தார்கள். ஆனால் வனாந்தரத்தில் பிறந்த இளம் சந்ததியினரை கர்த்தர் தெரிந்து கொண்டு, அவர்களை யோசுவாவின் தலைமையின் கீழ் கானான் தேசத்தைச் சுதந்தரிக்க வைத்தார்.
அதுபோல நம் ஆண்டவரை ஏமாற்றின தேவ ஊழியர்களைக் கிறிஸ்தவர்களைக் கர்த்தர் புறக்கணித்து, இந்தக் கடைசி காலத்தில் பிறந்திருக்கிற இளம் சந்ததியரை தனக்காகத் தெரிந்து கொண்டேன் என்று சொன்னார்.
தேவன் இந்த இளம் சந்ததியரை தனக்கென்று தெரிந்து கொண்டதின் நோக்கம்: இவர்களைக் கொண்டு தேசங்களைச் சுதந்தரிக்க அதாவது சத்துருவின் முகத்திரையை கிழித்து இயேசுவே தெய்வம் என்று அறிவித்து அதை நிரூபிக்க இந்த இளம் சந்ததியினரை கர்த்தர் தெரிந்து கொண்டார். இந்தக் கடைசி காலத்தில் பரலோகத்திலிருந்து தேவன் இந்தப் பூமியில் உள்ள மனிதர்களுக்கென்று கொடுக்கிற ஒரு பெரிய நன்மை, இந்த இளம் சந்ததி மூலமாகக் கொண்டு வருகிற எழுப்புதல் தான். அது ஒரு வார்த்தையின் எழுப்புதலாக இருக்கும் என்றார். இதுதான் இன்று அழிந்து கொண்டிருக்கிற இந்தியாவையும் மற்ற தேசங்களையும் சீர்படுத்தவதற்கான தேவனுடைய வழி. அந்த இளம் சந்ததியரை ஆயத்தப்படுத்தும் பணியிலே அவருடைய கிருபையினாலே என்னைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
யோசுவாவின் தலைமையின் கீழ் இருந்த இஸ்ரவேல் புத்திரர் யுத்த வீரர்களாய் காணப்பட்டார்கள். அதுபோல இந்த இளம் சந்ததியினரை கர்த்தருடைய சேனையாக (யுத்த வீரர்களாக) ஆயத்தப்படுத்தும் படியாக எனக்குத் தேவன் கட்டளையிட்டார். கர்த்தருடைய சேனையாக அவர்கள் இருப்பதற்கான கட்டளைகளையும், அவர்களை உருவாக்குவதற்கான வார்த்தைகளையும், ஆலோசனைகளையும் எனக்குக் கொடுத்தார்.
குறிப்பாக, அவர்கள் கர்த்தருடைய சேனையாகத் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு எப்படிப்பட்ட அர்ப்பணிப்பை, பரிசுத்த வாழ்க்கையை, தியாகத்தைத் தேவன் அவர்களிடத்தில் எதிர்பார்க்கிறார் என்பதை எனக்குப் போதித்தார்.
கர்த்தருடைய வார்த்தையின்படியே அந்த இளம் சந்ததியினரை கர்த்தருக்காய் எழுப்புகிற இந்தப் பணியை முதலாவது என் சொந்தக் குடும்பத்திற்குள் இருந்தே கர்த்தர் ஆரம்பிக்க வைத்தார். அதன் பிறகு அநேக இடங்களுக்கு என்னைக் கொண்டு போய் இளம் வாலிபர்களைச் சந்தித்து இந்தக் கடைசி காலத்து கர்த்தருடைய சேனையாக அவர்கள் எழும்பும்படியாக என்னைப் பயன்படுத்தினார். ஆனால் இதை ஆவியானவரின் ஒத்தாசை இல்லாமல் ஒரு துளியளவு கூடச் செய்ய முடியவில்லை... சகலமும் அவருடைய உதவியினால் தான் செய்ய முடிந்தது... செய்து கொண்டிருக்கிறேன்... இன்னும் அவருடைய கிருபையினால் செய்து முடிப்பேன்.
அதேநேரம் இந்த இளம் சந்ததியருக்கு விரோதமாகச் சத்துரு எப்படி கிரியை செய்வான் என்றும், எந்த விதமாகத் தீவிரமாகப் போராடுவான் என்று அவனுடைய தந்திரங்களையும், அதை மேற்கொள்வதற்கான வழிகளையும் கர்த்தர் வெளிப்படுத்திக் கொடுத்தார்.
என்னுடைய தாயாரின் அர்ப்பணிப்பின்படி, அதாவது "நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோனில் வாசம் செய்கிற இஸ்ரவேலின் தேவனுக்கு அற்புதங்களாகவும் அடையாளங்களாகவும் இருப்போம்" என்ற அர்ப்பணிப்பின் படி இந்த இளம் சந்ததியை உருவாக்கும் பணியை என் சொந்த குடும்பத்திற்குள் இருந்தே கர்த்தர் ஆரம்பிக்க வைத்தார். இந்தத் தெரிந்து கொள்ளுதல் அவருடைய கிருபையினால் வந்ததே தவிர வேறு ஒன்றும் இல்லை.
அப்படியே இந்த இளம் வாலிபர்களைக் கர்த்தருக்காக ஆயத்தப்படுத்தும் பணியில் முதலாவது இந்த வாலிபர்களைக் கர்த்தர் சுத்திகரிக்க ஆரம்பித்தார். இந்தச் சுத்திகரிப்பு "கர்த்தருக்காக நான் வாழ விரும்புகிறேன்" என்று சொல்லுகிற எல்லோருக்கும் உண்டு. இந்தச் சுத்திகரிப்பு நடைபெறும் பொழுதுதான் நாம் எந்த அளவுக்குக் கர்த்தரை நேசிக்கிறோம் என்பதை அறிய முடியும். ஏனென்றால் நாம் அதிகம் விரும்புகிற காரியங்களைக் கர்த்தருக்காக வெறுக்கவும், இழக்கவும் வேண்டியதாக இருக்கும். மற்றும் நாம் வெறுக்கிற, வேண்டாம் என்று ஒதுக்கின காரியங்களைத் தேவன் அன்போடு கூட ஏற்றுக் கொள்ளச் சொல்வார். இதற்குப் பெயர்தான் சுத்திகரிப்பு. ஆனால் இது நடைபெறும்பொழுது அநேகர் பின்வாங்கி விடுவார்கள். இது என் குடும்பத்திற்குள்ளும் நடந்தது... இந்நாள் வரை நான் சந்திக்கிற எல்லா வாலிபர்களுக்குள்ளும் நடந்து கொண்டிருக்கிறது.
காரணம், இன்று திருச்சபைகளுக்குள், பரிசுத்தம் என்றால் என்ன?, பரிசுத்தமாவது எப்படி?, இயேசுவை நேசிப்பதின் உண்மையான அர்த்தம் என்ன?, பரிசுத்தத்திற்கும் அசுத்தத்திற்கும் உள்ள வித்தியாசம், நீதிக்கும் அநீதிக்கும் உள்ள வித்தியாசம், தேவன் எதில் பிரியமாய் இருக்கிறார் எதை வெறுக்கிறார், உண்மையான தேவஅன்பு எது? போன்ற உபதேசங்கள் போதிக்கப்படவில்லை. கிறிஸ்துவை பின்பற்றுவதற்கு மாதிரிகளாக வாழ்கிறவர்களும் இல்லை. பாவங்கள், அக்கிரமங்கள், துணிகரங்கள் கண்டிக்கப்படவில்லை. நீ எப்படி வாழ்ந்தாலும் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார், உனக்குச் சமாதானம் தருவார், உன் இதயத்தின் வேண்டுதலின்படி உனக்கு நிச்சயம் தருவார் என்று உண்மைக்குப் புறம்பானவைகள் போதிக்கப்படுகிறதே இதற்குக் காரணம்.
மொர்தெகாயுவின் வளர்ப்பு மகளான எஸ்தர், அகாஸ்வேரு ராஜாவுக்கு ராஜாத்தியாக முடி சூட்டப்படும் முன் அவள் ஒரு வருஷம் சுத்திகரிக்கப்பட வேண்டியதாக இருந்தது. அவள் அப்படி சுத்திகரிக்கப்பட தன்னை ஒப்புக் கொடுக்காமல் மற்றும் அவர்கள் சொல்கிறவிதமாகச் சுத்திகரிக்கப்படாமல் ராஜாவிடத்தில் அவள் போகவே முடியாது. ஆனால் எஸ்தர் தன்னைப் பூரணமாக அதற்கு ஒப்புக்கொடுத்தாள். முதலாவது அவளைச் சிறுவயதிலிருந்து அன்பு பாராட்டி வளர்த்த மொர்தெகாயுவிடமிருந்து அவள் பிரிக்கப்பட வேண்டியதாயிற்று. தன்னுடைய விருப்பத்தின்படி அவள் எதையுமே கேட்கவில்லை. அவளுக்கு நியமிக்கப்பட்ட ராஜாவின் பிரதானியாகிய ஏகாய், என்ன சொன்னாரோ அதை மட்டுமே அவள் செய்தாள். ஆகவே அவளைக் காண்கிற எல்லோரிடத்திலும் அவர்கள் கண்களில் அவளுக்குத் தயவு கிடைத்தது. இப்படித்தான் எஸ்தர் ராஜாத்தியாவதற்கு தகுதியும் அடைந்தாள்.
இன்று யாரெல்லாம் கர்த்தர் விரும்புகிற விதமாகத் தன்னை சுத்திகரித்துக் கொள்வதற்கு ஆயத்தமாக இருக்கிறார்களோ அவர்களே, அவருக்குப் பிரியமான மணவாட்டியாக, அவருடைய சேனையாக இந்த நாட்களில் மாற முடியும், வாழ முடியும்.
நம்முடைய பார்வைக்கு நலமானபடி, நம்முடைய மனதுக்குத் தோன்றுகிறபடி அல்லது நம்முடைய இஷ்டப்படி வாழ்வது கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல.
நம் இயேசு கிறிஸ்துவின் பார்வைக்கு ஏற்றபடி, அவருடைய சித்தப்படி, நம்முடைய நன்மைக்காகக் கொடுத்த அவருடைய வார்த்தையின்படி வாழ்வதே கிறிஸ்தவ வாழ்க்கை.
தொடரும்....
Comments