பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள வித்தியாசம்!!!
தொடர்கிறது... பாகம் - 4
மத்தேயு 5
27: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
28: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
நீங்கள் இப்பொழுது கேட்கலாம், பழைய ஏற்பாட்டில் விபச்சாரம் செய்தால் கொலை செய்யப்படக்கடவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் இயேசு இங்குக் கொலை செய்யச் சொல்லவில்லையே என்று வாதிடலாம்.
அப்படி என்றால் இயேசு சொல்கிறதையும் நாம் முழுவதுமாகக் கவனிக்க வேண்டும். இயேசு விபச்சார பாவத்தின் ஆணிவேரை காண்பித்து விட்டு, உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால் உன் கண்ணைத் தறித்துப்போடு, உன் கை அல்லது கால் இடறல் உண்டாக்கினால் அவைகளைத் தறித்துப்போடு என்று சொல்லி இருக்கிறாரே... இப்பொழுது நாம் என்ன செய்யலாம்?
இயேசு சொல்கிற விதமாக நாம் செய்தால் கிறிஸ்தவர்களில் அநேகர் கண்ண் இல்லாமல், கால் இல்லாமல், கை இல்லாமல்தான் அலைய வேண்டியிருக்கும். ஆனால் பாகம் 3 ல் இதற்கான விளக்கம் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வேதவசனங்கள் பரிசுத்த ஆவியினால் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த காலத்தில் வாழ்ந்த தேவ மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு வேதத்தின் ஒவ்வொரு பகுதிகளையும் எழுதினார்கள். அந்தப் புத்தகங்கள் எல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டு வேதப்புத்தகமாக நம்முடைய கைகளில் இருக்கிறது.
ஆகவேதான் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம்வரைக்கும் எல்லா வார்த்தைகளும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே வேதபுத்தகத்தின் ஆசிரியர் பரிசுத்த ஆவியானவரே. எனவே பரிசுத்த ஆவியானவர் உதவி இல்லாமல் நாம் வேதத்தைப் படித்தால் நாம் தவறாகப் புரிந்து கொள்வோம். இன்று கிறிஸ்தவர்களுக்குள்ளே அநேக குழப்பங்கள் காணப்படுகிறதின் காரணம் பரிசுத்த ஆவியானவர் ஒத்தாசை இல்லாமல் வெறுமனே வேத புத்தகத்தைப் படித்தது அல்லது உலக ஞானத்தை கொண்டு வேதபுத்தகத்தை பார்த்தது. இந்த உலகத்தின் ஞானம் பைத்தியம் (1 கொரிந்தியர் 1:20, 21) என்று கர்த்தருடைய வேதம் சொல்லுகிறது. உலகத்தின் ஞானத்தைக் கொண்டு தேவனை அறிய முடியாது.
இன்று கிறிஸ்தவர்களில் அநேகர், ஒருவர் கர்த்தருடைய ஆவியினால் ஏவப்பட்டு, "ஆவியானவர் சொல்லுகிறார்" என்றால் அதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
அநேக போலியான ஊழியர்கள் எழும்பித் தாங்கள் சொல்லுகிற வார்த்தைகளை ஆவியானவர் சொல்லுகிறார் என்று சொல்லி அநேகரை ஏமாற்றியதின் விளைவே. இது ஒரு பிசாசின் வஞ்சக வலை. இப்படி ஆளாளுக்கு ஆவியானவர் சொல்லுகிறார் என்று ஏமாற்றினால் உண்மையாகவே ஆவியானவர் மூலமாக ஒருவன் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். இதுதான் பிசாசின் தந்திரம்.
இப்படி இவர்கள் இது உண்மையா போலியா என்று கண்டுபிடிக்க முடியாமல் தவறு செய்கிறதின் காரணம் அவர்கள் உலக ஞானத்திற்கோ அல்லது சுயத்திற்கோ கிறிஸ்துவுக்குள் மரிக்கவில்லை. இதுதான் இரண்டாவது காரணம்.
1 கொரிந்தியர் 2:14
ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான் என்று கர்த்தருடைய வேதம் எச்சரிக்கிறது.
ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதின் பிரதானமான நோக்கமே: கிறிஸ்து சொன்னவைகள் யாவற்றையும் நமக்குப் போதித்து நம்மைப் பெலப்படுத்தி வழிநடத்துவதே. ஆகவே பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் இந்த வேத பகுதிகளை நாம் புரிந்து கொள்ளவே முடியாது.
நான் ஏற்கனவே முந்தின பாகங்களில் சொல்லியபடி ஜனங்கள் நடுவே தேவன் இராதபடிக்கு இந்தப் பாவங்கள் எல்லாம் மனுஷரை தீட்டுப்படுத்துகிறதாக இருந்தது மேலும் தற்காலிகமான சுத்திகரிப்பு மாத்திரமே அந்த நாட்களில் இருந்தது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் அனுப்பப்படும் வரை நியாயப்பிரமாணத்தின் கட்டளையின்படி விபசாரம் செய்தவன் கொலை செய்யப்பட்டு வந்தான். இயேசு இந்த உலகத்திற்கு வந்தபொழுது பிதாவாகிய தேவனால் அந்த வழக்கம் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் விபசாரம் செய்த நபருக்குப் பதிலாக இயேசு கொலை செய்யப்பட்டதை நாம் மறந்து விடக் கூடாது. தேவனுடைய மிகுந்த அன்பு இரக்கம் தயவின்படி நமக்குப் பதிலாக இயேசு கொலை செய்யப்பட்டார், நாம் தப்பி பிழைத்துக் கொண்டோம். ஆகவே தேவனுடைய நியமனம் அதாவது நியாயப்பிரமாணம் மாறவே இல்லை. எனவேதான் இயேசு சொன்னார் "நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்." மத்தேயு 5:17
அதின் நிமித்தம் தான் விபசாரத்தில் கையும் களவுமாய் பிடிக்கப்பட்ட பெண்ணிடத்திலும் கர்த்தர் இரங்கினார். ஆனால் இனி பாவம் செய்யாதே என்று அவளை எச்சரித்து அனுப்பினார். இந்தக் கிருபையை இன்று அநேகர் தவறாகப் புரிந்து கொள்ளுகிறார்கள். இயேசு நமக்காக ஆக்கினியை அடைந்தார் ஆகவே இனிமேல் நமக்கு ஆக்கினைத் தீர்ப்பு இல்லை என்று சொல்லுகிறார்கள் மேலும் இனி இயேசு யாரையும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப் போவதில்லை என்றும் சொல்லுகிறார்கள். ஆனால் கர்த்தர் அப்படி சொல்லவில்லை.
நமக்காக இயேசு கொலை செய்யப்பட்டதின் நிமித்தம் நாம் மன்னிக்கப்பட்டு மறுபடியும் திருந்தி வாழ்வதற்கான இரக்கத்தைப் பெற்றோம். மேலும் நமக்குத் துணை செய்வதற்காகப் பரிசுத்த ஆவியானவரும் கொடுக்கப்பட்டிருக்கிறார். ஆகவே இப்பொழுது நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்து அவருடைய கட்டளைகளின்படி நாம் வாழ வேண்டும், அப்படி வாழ்வதும் எளிது. ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது நமக்குத் துணை நிற்கிறார்.
இயேசு இந்தக் கட்டளைகளையெல்லாம் இனி நீங்கள் செய்யத் தேவையில்லை என்று சொல்லவில்லை ஆனால் அந்தக் கட்டளைகளைத் தெளிவாக எடுத்துக் கூறி நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக வாழ வேண்டும் என்று எச்சரித்தார்.
தேவனிடத்தில் அன்பு கூர்ந்து அவருடைய கட்டளைகளின்படி நாம் எப்படி வாழ்வது என்று பரிசுத்த ஆவியானவர் துணையோடு அவர் வாழ்ந்தும் காண்பித்தார். ஆகவே கிறிஸ்து இயேசுவை கவனித்துப் பாருங்கள்.
ஆகவே இந்தத் தருணத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நமக்கு ஆக்கினைத் தீர்ப்பு இல்லை. ஆனால் நாம் மீண்டும் தேவனுக்கு விரோதமாகத் துணிகரமாகப் பாவம் செய்வோமானால்,
எபிரேயர் 10
26: சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
27: நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
28: மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;
29: தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
மேலே சொல்லப்பட்ட வேத வசனங்களின்படி பழைய ஏற்பாட்டைக் காட்டிலும் நமக்குக் கொடிதான ஆக்கினைத் தீர்ப்பு உண்டு.
தொடரும்...
Comments