![](https://static.wixstatic.com/media/fe17a4_cae4cde82bba496b8eb5a3389fd57db2~mv2.jpg/v1/fill/w_980,h_980,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/fe17a4_cae4cde82bba496b8eb5a3389fd57db2~mv2.jpg)
பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் உள்ள வித்தியாசம்!!!
தொடர்கிறது... பாகம் - 3
இயேசு சொன்ன மற்றொரு காரியத்தைக் குறித்து நாம் பார்க்கப் போகிறோம்.
மத்தேயு 5
27: விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
28: நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
இங்கேயும் பழைய ஏற்பாட்டில் பிதாவாகிய தேவனால் சொல்லப்பட்ட கட்டளையை இயேசு மாற்றவில்லை ஆனால் அந்தப் பாவம் எங்கு நடைபெறுகிறது என்று அதின் வேரைக் காண்பிக்கிறார்.
ஒரு பெண் ஆணையோ அல்லது ஒரு ஆண் பெண்ணையோ இச்சையோடு பார்க்கும்பொழுது விபசாரம் என்னும் பாவம் தொடங்கவில்லை, ஆனால் விபச்சாரம் அவன் | அவள் இருதயத்துக்குள் நடைபெற்று விடுகிறது. இது எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது. இச்சை எவ்வளவு ஆபத்தானது என்பதை இயேசுவின் வார்த்தை நமக்குத் தெளிவு படுத்துகிறது.
ஆகவேதான் இயேசு சொன்னார்...
மாற்கு 7
20: மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
21: எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாதசிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
22: களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
23: பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
(எரேமியா 17 9) என்று இயேசு நம்முடைய இருதயம் எவ்வளவு பொல்லாப்பானது என்பதை நமக்குச் சொல்லுகிறார்.
விபசாரம் செய்யக் கூடாது இது தேவனுக்கு விரோதமானது என்று மாத்திரம் அநேகர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இச்சையாக நாம் பார்க்கும் பொழுதே இருதயத்தில் விபசாரம் நடந்து விடுகிறது என்றும் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்து விடுகிறோம் என்பதை அநேகர் அறியாதிருக்கிறார்கள்.
நம்முடைய சரீரம் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறது என்பதை நாம் எப்பொழுதும் உணர வேண்டும்.
ஆகவே ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாகிய நம்முடைய சரீரத்தை வேசியின் அவயவங்கள் ஆக்கலாமா?
ஜீவனுள்ள தேவனுடைய ஆலயத்தை நீ கெடுத்தால் தேவன் உன்னைக் கெடுப்பார் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறதல்லவா. (1 கொரிந்தியர் 3:17)
இன்று நம்முடைய இருதயத்தை விபசாரத்தினால் வேசித்தனத்தினால் நிரப்பச் சத்துரு ஏராளமான தீமைகளை நமக்கு முன்பதாக ஒவ்வொரு நாளும் வைக்கிறான். அவனுடைய நோக்கம்: தேவனுடைய மகிமை வெளிப்படுகிற ஆலயமாக நாம் காணப்பட்டு விடாதபடி நம்மைக் கெடுத்து நிர்மூலமாக்கவே... ஆகவே நாம் பார்க்கிற காரியங்களைக் குறித்து, கேட்கிற விஷயங்களைக் குறித்து, ருசிக்கிற மற்றும் உணர்கிற காரியங்களைக் குறித்து மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
உடுத்துகிறவர்களுடைய நிர்வாணத்தை வெளிப்படுத்துகிற, இச்சையைத் தூண்டுகிற ஆடை அலங்காரங்கள் இன்று ஏராளமாகிவிட்டது. ஒரு விசை, ஆடை அலங்கார நிபுணர்களை அசுத்த ஆவிகள் ஆட்கொண்டு மனிதர்களுக்குள் இச்சையை தூண்டுகிற ஆடைகளைத் தயாரிக்க அவர்களை எப்படி நடத்துகிறது என்பதை ஆண்டவர் எனக்குக் காண்பித்தார். இன்று நடைமுறையில் இருக்கிற அநேக ஆடை அலங்காரங்கள் சத்துருவினால் உலகத்திற்குள் வந்தவைகள். பெண்கள் அதிகமாக விரும்பி அணிகிற லெக்கின்ஸ் பிசாசிடமிருந்து வந்தவை. லோ ஹிப் ஜீன்ஸ் போன்ற இருபாலரும் அணிகிற ஆடைகள் சத்துருவினிடமிருந்து வந்தவைகள்.
இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல்வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
(மத்தேயு 18: 7) என்று ஆண்டவர் இயேசு இந்த விதமாக மற்றவர்களுக்கு இடறலை உண்டு பண்ணுகிறவர்களைக் குறித்து எச்சரிக்கிறார்.
ஆனால் இப்படி உடுத்துகிறவர்கள் "என் வாழ்க்கை, என் உரிமை. அதில் நீ ஏன் தலையிடுகிறாய்" என்று ஆணவமாகப் பேசுவார்கள். "பிரச்சினை என்னுடைய உடையில் அல்ல, உன் பார்வையில் தான் கோளாறு உன்னைச் சரிப்படுத்திக் கொள்" என்று வீம்பு பேசுவார்கள்.
நாம் அனைவரும் தகுதியான வஸ்திரங்களை அணிய வேண்டும் (1 தீமோத்தேயு 2:10) என்று வேதம் நமக்கு ஆலோசனை கொடுக்கிறது.
மற்றவர்களுக்கு நாம் இடறலாகவும் இருக்கக் கூடாது அதே நேரம் மற்றவர்களைப் பார்த்து நாம் இடறவும் கூடாது. அதைக் குறித்து ஆண்டவர் இயேசு சொல்கிறார்:
மத்தேயு 5
29: உன் வலதுகண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
30: உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும். உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
இந்த வசனங்களை நீங்கள் வாசிக்கும்பொழுது திடுக்கிடலாம். நம்முடைய அவயவங்களை ஆண்டவர் பிடுங்கிப் போடச் சொல்லுகிறாரே என்று ஆச்சரியப்படலாம். இவைகள் வெளியரங்கமாக அதாவது சரீரப்பிரகாரமாகச் செய்யப்படும் படியாக ஆண்டவர் சொல்லவில்லை ஆனால் ஆவியின் பிரகாரமாக இது நடைபெற வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதைக் குறித்து நாம் பார்ப்போம்.
ஆரம்பத்திலே நான் சொன்னேன்... நாம் கேட்கிற, பார்க்கிற, ருசிக்கிற மற்றும் உணர்கிற விஷயங்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று. ஒரு மனிதனுக்குள் விருப்பம் என்பது இந்த நான்கு உணர்வுகள் வழியாகத்தான் உண்டாகிறது. அதாவது ஒரு மனிதன் தான் பார்க்கிற அல்லது கேட்கிற அல்லது ருசிக்கிற அல்லது அவன் சரீரத்தில் உணர்கின்ற காரியங்களை வைத்துதான், அது வேண்டுமா அல்லது வேண்டாமா என்கிற விருப்பமும் வெறுப்பும் அவனுக்கு உண்டாகிறது.
உதாரணத்திற்கு: சாத்தான் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை ஏவாளுக்கு காண்பித்தபோது, "அதைப் பறித்துப் புசிக்க வேண்டும் அப்படி அதைப் புசிக்கும்பொழுது அது இன்பமாய் இருக்கும் என்ற இச்சை உணர்வு" அந்தப் பார்வையில் தான் ஏவாளுக்குள் உண்டாகிற்று. ஆகவே அவள் பழத்தைப் பறித்துப் புசிக்கும் முன்பே பாவம் அவளுடைய இருதயத்தில் கர்ப்பம் தரித்து விட்டது. அந்த இச்சையினால் அவள் பழத்தைப் பறித்துப் புசித்தபொழுது பாவம் மரணம் என்ற வேதனையான பிள்ளையைப் பெற்றெடுத்தது. இப்படித்தான் மனிதன் தேவனையும் அவர் அவனுக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களையும் இழந்து சாபத்திற்குள்ளானான்.
இப்படித்தான் ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ இச்சையோடு பார்க்கும்பொழுது, அந்த நபருடைய இருதயத்திற்குள் விபசாரம் நடைபெறுகிறது. அதின் பலன் தேவனுடைய ஆலயமாகிய உங்களுடைய வாழ்க்கையை தீட்டுப்படுத்தி தேவனுக்கும் உங்களுக்கும் தொடர்பு இல்லாதபடி மாற்றி விடுகிறது. ஆகவே இப்படி நேரிடாதபடி இடறலை உண்டாக்குகிற நம்முடைய அவயங்களை அழிக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதை எப்படிச் செய்வது?
(ரோமர் 8: 13) மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
ஆண்டவர் இயேசு இந்த உலகத்தை விட்டுக் கடந்து செல்வதற்கு முன் தன்னுடைய சீடர்களைப் பார்த்து, "நான் போகிறது நல்லது, நான் போகாவிட்டால் தேற்றரவாளன் வரார். நான் பிதாவிடத்திற்கு போய்த் தேற்றரவாளனை அனுப்புவேன், அவர் வந்து சகல சத்தியத்துக்குள்ளும் உங்களை வழிநடத்துவார் (யோவான் 16:7-14) என்று பரிசுத்த ஆவியானவரின் முக்கியத்துவத்தைக் குறித்து சொன்னார்.
ஆகவே ரோமர் 8:13 ல் சொல்லியபடி கர்த்தருடைய ஆவியினால் இடறல்களை உண்டு பண்ணுகிற நம்முடைய சரீரத்தின் அவயங்களை நாம் அழிக்க முடியும்.
நம் இயேசு நம்மைப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார் என்று யோவான் ஸ்நானகன் கர்த்தருடைய ஆவியினால் சொன்னார்.
இப்படிப்பட்ட இடறல்களை உண்டு பண்ணுகிற நம்முடைய அவயவங்களை நம் ஆண்டவரிடத்தில் அறிக்கையிட்டு நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மை விடுவிக்கும்படி நாம் அவரிடத்தில் வேண்டிக் கொண்டால், ஆண்டவர் இயேசு தாமே பரிசுத்த ஆவியினால் நம்மை நிரப்பி அவருடைய அக்கினியினால் நம்முடைய அவயங்களில் காணப்படுகிற இப்படிப்பட்ட அருவருப்புகளை சுட்டெரித்து போடுவார். அப்பொழுது நம்முடைய சரீரத்தின் அவயவங்கள் பரிசுத்தமாகக் காணப்படும். இதனால் நம்முடைய சரீரமாகிய ஆலயத்தின் மூலமாகத் தேவன் மகிமை அடைவார்.
இதை அறியாததினால் சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரைக்குமுள்ள அநேகர் இப்படிப்பட்ட இச்சையான பாவங்களினால் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாருடைய இருதயத்திற்குள்ளும் மறைந்து காணப்படுகிற இப்படிப்பட்ட ரகசியமான அருவருப்பான பாவங்களிலிருந்தும் நம்மை விடுவிக்கவே இயேசு இந்த உலகத்திற்குள் வந்தார். ஆகவே இப்படிப்பட்ட பொல்லாத இருதயம் உங்களை விட்டு நீங்கும்படி ஆண்டவர் இயேசுவிடம் கேளுங்கள் அப்பொழுது சுத்தமான இருதயத்தை உங்களுக்குள்ளே அவர் சிருஷ்டிப்பார்.
ஆகவே பழைய ஏற்பாட்டைக் கர்த்தர் அழிக்க வரவில்லை அதை நிறைவேற்றவே வந்தார்.
தொடரும்...
Comments